விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய், விஜய் சேதுபதி இருவரின் பேச்சுகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 9-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 20-ம் தேதி மற்றும் 27-ம் தேதி வெளியாகவிருந்த படங்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டன. இதனால், படங்களின் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ‘மாஸ்டர்’ வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் விசாரித்தபோது, ” ‘மாஸ்டர்’ வெளியீடு கண்டிப்பாக ஏப்ரல் 9-ம் தேதி இருக்கும். அதற்குள் நிலைமை சீராகும் என நம்புகிறோம்.
மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழலில், ‘மாஸ்டர்’ படம் அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக இருக்கும் என நம்புகிறோம். இப்போதைக்கு எங்களுடைய வெளியீடு ஏப்ரல் 9-ம் தேதிதான்” என்று குறிப்பிட்டனர்.