Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திண்டுக்கல்லில் தர்பார் ரிலீஸ் இல்லை – பேனர்களை கிழித்து ரஜினி ரசிகர்கள் ரகளை

darbar release

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள 2 சினிமா தியேட்டர்களில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதிகாலையில் சிறப்பு காட்சிக்காக டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று இரவு 9 மணிக்கு தியேட்டர் முன்பு குவிந்தனர். இரவு 12 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது தர்பார் படம் திண்டுக்கல்லில் வெளியாகவில்லை என்ற தகவல் பரவியது.

இதனால் டிக்கெட் எடுப்பதற்காக பனியில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தியேட்டர் முன்பு அவர்கள் சத்தமிட்டபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இன்று காலை படம் ரிலீஸ் ஆகி விடும் என்று ரசிகர்கள் தியேட்டர் அருகிலேயே விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் இன்று காலையும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்ட‌னர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் படம் ரிலீஸ் ஆன நிலையில் திண்டுக்கல்லில் மட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.