Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா

Dulquer Salmaan and prasanna

அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட டுவிட்டுக்கு கீழ் கமெண்ட் செய்திருந்த பிரசன்னா, “மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர்” என்று கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் நன்றி தெரிவித்துள்ளார்.