கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி சங்கம் நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்து சங்கத்தின் தனி அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனை ஏற்று நடிகர்-நடிகைகள் பலர் நிதி அளித்து வருகிறார்கள். நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் 2 ஆயிரம் பேர் வங்கி கணக்கில் நடிகர் சங்கம் சார்பில் தலா ரூ.500 போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் 1,500 பேருக்கு நடிகர் விஷால் ஒரு மாதத்துக்கான மளிகை சாமான்களை வழங்கினார். மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான்களை வழங்கினார். இந்த உதவி பொருட்களை நடிகர் ஸ்ரீமன், தினேஷ் ஆகியோர் நேரில் வழங்கினர். வெளியூரில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவி பொருட்கள் வழங்க விஷால் ஏற்பாடு செய்துள்ளார்.