மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ மற்றும் ‘அயன்லேடி’ பெயர்களில் திரைப்படங்கள் ஆகின்றன. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். தலைவி பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராக இயக்கி வெளியிட்டார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷணன் நடித்து இருந்தார். ஜெயலலிதாவின் அம்மா கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும், எம்.ஜி.ஆர் வேடத்தில் இந்திரஜித் சுகுமாரனும் வந்தனர்.
ஜெயலலிதாவின் குழந்தை பருவம் கல்வி, வக்கீலாக வேண்டும் என்ற கனவு, எதிர்பாராமல் நடிகையானது, சினிமாவில் சந்தித்த சவால்கள் போன்றவை தொடரில் இருந்தன. எம்.ஜி.ஆரின் மரணத்தோடு இந்த வெப் தொடர் முடிந்தது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து குயின் தொடரின் 2-ம் பாகத்தை எடுக்க கவுதம் மேனன் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் பாகத்தில் முழுக்க ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை பதிவு செய்யப்படும் என்றும், இதிலும் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணனே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகாமல் உள்ளது. அதேபோல் சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படமும் தள்ளிப்போகிறது. இதனால் அவர் குயின் வெப் தொடரின் 2-ம் பாகத்தை இயக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.