கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஓய்வு பொழுதை எப்படி போக்குகிறார் என்ற கேள்விக்கு நடிகை சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார்.
“தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்போது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி. சினிமாவுக்காக திரைக்கதை தயார் செய்து வருகிறேன். அதை செய்ய போதுமான நேரம் இருக்கிறது.
பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க இதுவே அற்புதமான தருணம். வீட்டுக்குள் இருங்கள். அரசாங்கத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றுங்கள் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.