கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவிகள் வழங்கி வருகிறார்கள். தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி வில்லன் நடிகர் சோனு சூட் மும்பையில் தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். அவரது சேவையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும், நர்சுகளும், தொண்டு நிறுவனத்தினரும் இரவும்-பகலும் உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நானும், என்னால் ஆன உதவிகளை செய்வதில் பெருமை அடைகிறேன்’ என்றார்.
சோனு சூட் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.