நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களை பற்றியே கேட்கப்படுகின்றன. ஆண்களை பார்த்து, இந்த கேள்விகளை யாரும் கேட்பது இல்லை. பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும் இருக்கிறாள். பொருளாதாரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்கிறாள்.
அவளை குழந்தை பெற்றுக் கொடுப்பவளாகவும் பார்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகவே பெண் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளரும் குழந்தை, அவளை சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை. எப்போதும் வாந்தி எடுப்பது போலவே உணர்கிறாள். வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதை பெற்று எடுப்பது என்பது மரணம் போன்றே இருக்கும்.
அவள் ஒருமுறை கர்ப்பமாகி அதில் இருந்து மீள முடியாது. மீண்டும் அவளை கர்ப்பமாக்க அவளது கணவன் தயாராக இருக்கிறான். மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே இருக்கிறாள். பெண்ணின் வலியில் ஆண் பங்கெடுப்பது இல்லை.
ஆண்களை பொறுத்தவரை பெண்களை பாலுணர்வை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலி. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே அவன் நடத்துகிறான். இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.