Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மஞ்சுவாரியருடன் இணைந்து நடிக்க தயக்கம் இல்லை – நடிகர் திலீப்

dileep and manju warrier

மலையாள நடிகை மஞ்சுவாரியரும், நடிகர் திலீப்பும் 1998-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

மலையாள முன்னணி நடிகையை கூலிப்படையை ஏவி கடத்திய புகாரில் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு திலீப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நடிகை கடத்தல் வழக்கில் முக்கியமான விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தற்போது இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சுவாரியர் மீது எனக்கு கோபமோ, விரோதமோ இல்லை. அவருடன் இணைந்து நடிக்கவும் தயக்கம் இல்லை.

பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன். மலையாளத்தில் எனக்கு எதிராக உருவாக்கப்பட்ட மலையாள திரையுலக பெண்கள் கூட்டமைப்பினர் மீதும் எனக்கு கோபம் இல்லை. அவர்களும் எனது சகாக்கள்தான். மலையாள பட உலகில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது.” இவ்வாறு திலீப் கூறினார்.