Tamilstar
Movie Reviews

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம்

நடிப்பு – ஆரவ், காவ்யா தாப்பர் ராதிகா மற்றும் பலர்

தயாரிப்பு – சுரபி பிலிம்ஸ்

இயக்கம் – சரண்

இசை – சைமன் கே கிங்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one

வெளியான தேதி – 29 நவம்பர் 2019

ரேட்டிங் – 1.75/5

தமிழ் திரைப்பட உலகில் இன்னும் பேய்ப் படங்கள் பிடித்த ஆட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்து விடுபட்டால்தான் கொஞ்சம் விடிவு காலம் பிறக்கும். தமிழ் சினிமாவிற்கு

அஜித்குமார் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், சியான் விக்ரம் நடித்த ஜெமினி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரண் தான் இந்த மார்க்கெட் ராஜா எம் பி பி ஏஸ் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகம் வருகிறது.

நகைச்சுவைப் படமா, காதல் படமா, பேய்ப் படமா, ஆக்ஷன் படமா எப்படி கொடுக்கலாம் என படத்தின் இயக்குனர் சரண் நிறையவே குழம்பிப் போய் படத்தை இயக்கியிருக்கிறார் ஏன் தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் உள்ள பல கதாபாத்திரங்கள் நாடகத்தனமாகவே நடித்திருக்கிறார்கள். தனது முந்தைய படங்களின் சாயல், காட்சியமைப்புகள் என பலவற்றை மீண்டும் இந்தப் படத்தில் நுழைத்திருக்கிறார் இயக்குனர் சரண். புதிதாக, வித்தியாசமாக எந்த ஒரு காட்சியும் இல்லாமல் இருப்பது பெரும் குறைதான்.

சென்னை, பெரம்பூர் மார்க்கெட் பகுதியில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்தில் ராஜாவாக இருப்பவர் கதாநாயகன் ஆரவ். அரசியல்வாதி சாயாஜி ஷின்டேவின் கையாளாக இருக்கிறார். கதாநாயகன் ஆரவ்வை என்கௌண்டரில் போட போலீஸ் திட்டமிடுகிறது.

அப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது மருத்துவக் கல்லூரி மாணவரான விஹான் மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டு அவர் இறக்கிறார். பயந்த சுபாவமுள்ள விஹான் ஆவி, தாதாவான கதாநாயகன்ஆரவ் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. தாதாவான கதாநாயகன் ஆரவ், சாதாவாக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் எல்லாம் அவரது தாதா கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக உள்ளது. ஆனால், நடிப்பை வெளிப்படுத்துவதற்கான காட்சிகள் தான் அதிகமில்லை. ஆவி புகுந்த பின் பயத்தைக் காட்டுவதில் மட்டும் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

ஒரு ரவுடியைக் காதலிக்கும் ஆயிரத்து ஒண்ணாவது கதாநாயகி கதாபாத்திரத்தில் காவ்யா தாப்பர். டாக்டருக்குப் படிப்பவர் டானைக் காதலிக்கிறார். காதலிப்பதைத் தவிர காவ்யாவுக்கு வேறு வேலை இல்லை.

இந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. ஆரவ்வின் அம்மாவாக எப்போதுமே சுருட்டுப் பிடித்துக் கொண்டே வருகிறார் ராதிகா சரத்குமார் இம்மாதிரியான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து தன் மரியாதையை ஏன் கெடுத்துக் கொள்கிறார் எனறுக் கேட்கத் தோன்றுகிறது.

கதாநாயகி காவ்யா தாப்பரை ஒரு தலையாகக் காதலிக்கும் விஹான், அப்பாவி காதலனாக அழ வைக்கிறார். நிகேஷா பட்டேல் மாதிரியான சின்ன வீடு கதாபாத்திரங்களை இன்னும் எத்தனை தமிழ் சினிமாவில் பார்ப்பதோ ?. தெரியவில்லை.

மருத்துவக் கல்லூரி டீன் ஆக நாசர், வழக்கம் போல் அழுது வடியும் அம்மாவாக ரோகிணி, அரசியல்வாதி சாயாஷி ஷிண்டே, அமைச்சர் ஹரிஷ் பெரடி, வக்கீல் சாம்ஸ் எல்லாருமே டிராமாவில் நடிப்பது போலவே ஓவராக நடிக்கிறார்கள்.

வில்லனாக நடித்த ஆதித்யா மேனன் இந்தப் படத்தில் ஆரவ்வின் வலதுகரமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சைமன் கே கிங் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். சரண் படங்களில் எப்போபதும் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்தப் திரைப்படத்தில் அது மொத்தமாகவே மிஸ்ஸிங்.

இந்த திரைப்படத்தில் எந்த ஒரு விஷயத்தையாவது பாராட்டியோ, குறிப்பிட்டோ சொல்லாம் என யோசித்துப் பார்த்தால் ஒன்று கூட அப்படி ஏதும்மே இல்லை என்பது இயக்குனர் சரண் இயக்கியுள்ள இந்தப் திரைப்படத்தில் இருக்கும் அதிர்ச்சி.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – எல்கேஜி கூட  தேறவில்லை