Tamilstar
Movie Reviews

மிக மிக அவசரம் திரை விமர்சனம்

நடிப்பு : ஸ்ரீபிரியங்கா, ஹரிஷ், சீமான்,வழக்கு எண் முத்துராமன், இ ராமதாஸ், சரவண சக்தி மற்றும் பலர்

தயாரிப்பு : வி
ஹவுஸ் புரெடக்ஷன்ஸ்

இயக்கம் : சுரேஷ் காமாட்சி

இசை : இஷான் தேவ்

மக்கள் தொடர்பு : A ஜான்

வெளியான தேதி : 08 நவம்பர் 2019

ரேட்டிங் -: 3.5./5

 

தமிழகத்தில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே காவல் துறையில் பணிபுரியும் அனைத்து பெண் காவலர்கள், உயர்போலீஸ் அதிகாரிகளால் படும் அவஸ்தைகளும்,செக்ஸ் டார்ச்சருக்குள் சந்திக்கும் துயரங்களும் சொல்லி மாளாது.

ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் பெண்களுக்கும் அதே பிரச்சனைதான் ஆண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெண் அதிகாரிகளை செக்ஸ் டார்ச்சர் செய்வது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும்
பெண்களுக்கு ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த கருவை மையமாக கொண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம்தான் ‘மிக மிக அவசரம்”.

பெண்களின் பிரச்சனைகளை முக்கியமாக வைத்து வரும் திரைப்படங்கள் மிக மிகக் குறைவுதான். அந்தப் பிரச்சனைகள் அவர்களது வாழ்வியல் அல்லது மன ரீதியான பிரச்சனைகள்தான் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்களது உடல் ரீதியான பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒரு சில திரைப்படங்கள்தான்.
அந்த ஒரு சில திரைப்படங்களும் அவர்களது அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக தான் இருக்கும்.

பெண்களின் இயற்கை உபாதைகளைப் பற்றி இதுவரை எந்த ஒரு திரைப்படமும் தமிழ் திரை உலகில் வந்தது இல்லை என்பதுதான் உண்மை. அதிலும் இந்த திரைப்படத்தில் அதை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

பல கருப்பு ஆடுகள் கண்ணுக்கு அதிக பரப்பளவில் தெரிகிற காவல் துறையில் கண்ணியம் மிகுந்த சிலர் அரிதாகவே தெரிவார்கள். அந்த சிலரும் ஒரு கருப்பு ஆட்டின் கட்டளைக்கு கட்டுப்படுகிற நிலைக்கு வந்தால்..?

அதிலும் ஒரு பெண் காவலர் மாட்டிக் கொண்டால்?அவளும் கடமை உணர்வு மிகுந்தவளாக இருந்து விட்டால்?
சொல்லவே வேண்டாம்
அதிகாரி நினைத்தால் அந்த பெண்ணை நரகத்தில் தள்ளிவிடலாம்.!

சாலைகளில் கோவில் குளங்களுக்கு செல்லும் போது விவிஐபிக்கள் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகள் போலீசார் 20 அடிக்கு ஒருவராக காவல் காத்து கொண்டிருப்பார்கள். அதில் பெண் போலீசாரும் இருப்பார்கள். ஆண் போலீசார்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வார்கள். ஆனால், பெண் போலீசாருக்கு சிறுநீர் கழிப்பதோ அல்லது மாதவிடாய் காலமாகவே இருந்தால் அவர்கள் அதை எப்படி சமாளிப்பார்கள் என நீங்கள் என்றாவது யோசித்திருந்தால் உங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

ஸ்ரீலங்கா மந்திரி ஒருவர் கோயிலுக்கு வருகிறார் என்பதற்காக அவர் வரும் வழியிலும் கோயிலும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்படுகிறார்கள்.

பெண் போலீஸ் ஆன கதாநாயகி ஸ்ரீபிரியங்கா மீது சபலத்துடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் ( வழக்கு எண் முத்துராமன் ) கதாநாயகி ஸ்ரீபிரியங்காவை பழி வாங்குவதற்காக ஒரு பாலத்தின் மீது விவிஜபி பாதுகாப்பிற்காக நிற்க வைத்து பழி வாங்கத் துடிக்கிறார். வழக்கு எண் முத்துராமன்

பெண் போலீசாக நடித்துள்ள
கதாநாயகி ஸ்ரீபிரியங்காவிற்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் மனதில் பதிந்து விட்டார்.

ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பெண் போலீசின் நிலைமையையும், வலியையும், வேதனையையும் முக உணர்வு மற்றும் உடல் அசைவுகள் மூலமும் சிறப்பாக வெளிப்படுத்தி முழு கதையையும் நகர்த்தி இருப்பது சிறப்பம்சம்.குடிகார மாமனையும். அவரது மகளையும் காப்பாற்றும் தாயாகவும், தன் காதலனிடம் இக்கட்டான நிலையை விவரிக்கும் காதலியாகவும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ள ஸ்ரீ பிரியங்காவுக்கு மிக பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

ஒரு மேம்பாலம், மேம்பாலத்தின் மீது ஒரு பெண் போலீஸ். இதுதான் படத்தின் முக்கியமான கதைக்களம். அவ்வப்போது ஒரு கோயில், ஒரு டீக்கடை, ஒரு மருத்துவமனை மற்றும் சில துணைக் கதாபாத்திரங்கள். பல மணி நேரமாக அங்கேய நிற்கும் கதாநாயகி ஸ்ரீபிரியங்காவிற்கு சிறுநீர் கழித்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் ஆனால், அவரால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு எங்கும் செல்ல முடியாத அளவிற்கு இன்ஸ்பெக்டர் வழக்கு எண் முத்துராமன் அதிகாரத்தால் கட்டுப்படுத்துகிறார். தவியாய் தவிக்கும் கதாநாயகி ஸ்ரீபிரியங்காவை அதன் பின்ன என்ன நடக்கிறது அவர் சிறுநீர் கழித்தாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின்
மீதிக்கதை.

அதில் அப்பாவித்தனமாய் நடித்து அனுதாபத்தை அள்ளுகிறார். கதாநாயகிஸ்ரீபிரியங்கா
ஒரு நாள் முழுவதும் யாரோ ஒரு விவிஐபி அந்தப் பக்கமாக சில நொடிகள் மட்டுமே கடக்கும் நேரத்திற்காக எத்தனை பேர் கடமை என்பதற்காக கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நினைக்கும் போது அதன் மீது நமக்கு கோபம் வரத்தான் செய்கிறது.

கதாநாயகி ஸ்ரீபிரியங்காவின் நிலையைப் பார்த்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பரிதாப்படும் அளவிற்கு அவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இயக்குனர் சுரேஷ் காமாட்சி

அவர் மீது சிறிதும் பரிதாபப்படாமல் அவரை மேலும் கஷ்டப்படுத்திப் பார்க்கும் மேலதிகாரியாக வழக்கு எண் முத்துராமன்.
கதாநாயகிஸ்ரீபிரியங்காவின் காதலனாக ஹரீஷ்குமார். எப்படியாவது காதலிக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆம்புலன்ஸ் டிரைலவரான அரீஷ் அவருக்கும் கடமையே கண் என்பதால் காதலிக்கு உதவி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
ஈ.ராமதாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) மற்றும் உயர் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆகியோர் கதை ஒட்டத்திற்கான கன கச்சிதமான தேர்வு. அவரவர் பங்கிற்கு நிறைவாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை விரிவாக அலசி, அவர்கள் படும் வேதனைகளையும், இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் கஷ்டப்படும் காட்சிகள் ஒவ்வொன்றையும் உணர்வுகளோடு செதுக்கி இயற்கையே உதவி செய்வது போல் திரைக்கதையமைத்ததன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. உண்மையாகவே டைட்டிலுக்கேற்ற கதை என்பது படம் பார்ப்போர் உணரும் வண்ணம் காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்கு பாராட்டுக்கள்.

பாலபரணி ஒளிப்பதிவு, கதை, வசனம் இயக்குநர் ஜெகன்நாத், இஷான்தேவ் இசை, ஆர் சுதர்சன் எடிட்டிங், என்.கே.பாலமுருகன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.

ஸ்ரீலங்கா மந்திரிதான் விவிஐபி ஆக வருகிறார் என அமைத்து, சிலர் வெடிகுண்டு வைக்க வருகிறார்கள் என்ற ஒரு பரபரப்பைக் கூட்டியுள்ளார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

மொத்தத்தில் ‘மிக மிக அவசரம்” சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் பெண்களின் அவஸ்தையை மையமாக கொண்டிருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டிய படம் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

பெண்களுக்கான அவசியமான ஒரு பிரச்சினையை கதையாக எடுத்துக் கொண்டதற்காகப் பாராட்டலாம்.

மிக மிக அவசரம் – காவல் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு சமர்ப்பணம்