Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதாரவி சூழ்ச்சியால் வெற்றி பெற்று விட்டார் – சின்மயி

chinmayi and radha ravi

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியும் சின்மயியும் தலைவர் பதவிக்கு களம் இறங்கினார்கள். சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராக தேர்வானார்.

பின்னர் சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது:-

“ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும். என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்தது மிகப்பெரிய சூழ்ச்சியாகவே தெரிகிறது.

இங்கு தோற்றது நானாக மட்டும் இருந்திருந்தால் இப்போது பேச மாட்டேன். பல வருடங்களாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்த 10 சதவீத பணத்தை வைத்தே டப்பிங் யூனியனை நடத்தி வந்தார்கள். அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டிடம் கட்டப்பட்டது.

47.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டிடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு யூனியன் உறுப்பினர்களின் பணத்தை கையாடல் செய்திருக்கின்றனர். இந்த ஊழலை வெளிக்கொணர தான் நாங்கள் பாடுபட்டோம்.

எதிர்த்துப் பேசுபவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுவதும், கெட்ட வார்த்தைகளில் போன் செய்து திட்டுவதுமென இருந்தபோதே 45 சதவீத வாக்குகளை பெற்று இருந்தார்கள் ராதா ரவிக்கு எதிரானவர்கள்.

நானும் இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கிறேன் என்பதால் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டார்கள். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.