“கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிருத்விராஜ் வேடத்தில் சசிகுமாரும், பிஜூமேனன் வேடத்தில் சரத்குமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே என்.வி.நிர்மல்குமார் இயக்கும் ‘நாநா’ படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.