கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது. இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒருபோதும் மிருக காட்சி சாலைகளை ஆதரித்தது இல்லை. மிருக காட்சி சாலைகளுக்கு சென்று விலங்குகளை பார்க்கும்படி யாரையும் ஊக்குவித்ததும் கிடையாது.
ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள்.
மன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன. நாம் டிக்கெட் வாங்கி போய் பார்ப்பதால்தான் மிருக காட்சி சாலைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு போவதை நிறுத்தினால், விலங்குகளை அடைத்து வைப்பதையும் நிறுத்திவிடுவார்கள். விலங்குகள் நம்முடன் வாழ்பவையே தவிர நமக்காக வாழக்கூடியவை அல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.