Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹீரோ கதை திருட்டு விவகாரம்…. சட்டரீதியாக எதிர்கொள்வோம்- இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

sivakarthikeyan and ps mithuran

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த ஹீரோ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதைக்கு உரிமை கோரி உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

தனது கதையை திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 2 கதை சுருக்கங்களையும் ஆய்வு செய்த எழுத்தாளர் சங்கம் ஹீரோ கதை திருட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதம் வெளியானது. அதில் ஹீரோ கதை திருட்டுக் கதைதான் என்றும் படத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த குற்றச்சாட்டை ஹீரோ இயக்குனர் மித்ரன் மறுத்தார். அவர் கூறியதாவது:- “ஹீரோ படத்தின் கதையை பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் 3 எழுத்தாளர்களுடன் சேர்ந்து உருவாக்கினேன். இன்னொருவர் கதைக்கு உரிமை கோரியதும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்னை அழைத்து விசாரித்தது. அப்போது இரண்டு திரைக்கதைகளையும் படித்து முடிவு எடுக்கும்படி கூறினேன்.

ஆனால் திரைக்கதையை படிக்காமலேயே ஹீரோ கதை திருட்டுக்கதை என்று பாக்யராஜ் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. எங்கள் படத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றால் சட்டரீதியாக சந்திப்போம்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.