Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ்நாட்ட அவன்கிட்டேயிருந்து காப்பாத்தனும்.. விஷாலை ஒருமையில் பேசி கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்!

vishal and misskin

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இதன் தொடர்ச்சியாக ‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்தது. அதற்கு பிறகு விஷால் – மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், மிஷ்கின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணாமூச்சி’ வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 சர்ச்சை குறித்து விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:

ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் விஷாலை மோசமாக பேசும் போதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக 2-ம் பாகம் எழுதினேன். அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு தோல்வி. ’துப்பறிவாளன்’ வெற்றி பெற்றது. அந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னார், எழுதினேன். நிறைய கடன் இருக்கு, தமிழ் மட்டும் வேண்டாம், இந்திய அளவிலான மொழிகளில் எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதுகிறேன் என எழுதினேன். அந்தக் கதையை கேட்டு விஷாலுக்கு பிடித்து போய் என்னை கட்டிப்பிடித்து அழுதார். இந்த கதை எனக்கு போதும் என்றார். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்றார். வேறு தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி.

19 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே என்றும் தெரிவித்தேன். இல்லை சார், இந்தப் படம் நான் பண்ணுவேன். எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னார். இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும் தான். ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபக்க வேண்டும். அதற்கு பிறகு 13 கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவு செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் தான். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை தான் வந்துள்ளது. அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும்.

ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் தாயை அசிங்கமாக திட்டினார். விஷாலுக்கு என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்தோடு இருந்தது தான். அவன் தப்பு பண்ணும் போதெல்லாம், தப்பு பண்ணாதடா என்று சொன்னது தான். அவனுக்காக நல்ல கதை எழுதிக் கொடுத்தது என் தவறு. எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும். நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று? நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்துக்கோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா?.

ரமணாவும், நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள் என்று சொன்னேன். அது தான் நடந்தது. இன்று படம் நின்று போனதற்கு அவர்கள் தான் காரணம். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும். என் தம்பியை அடித்தார்கள். இனி விடமாட்டேன். தமிழகத்தில் நான் மட்டும் தான் அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவரிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்”. இவ்வாறு மிஷ்கின் விஷாலுக்கு சவால் விடும் வகையில் பேசினார்.