Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் ரத்துக்கு எதிர்ப்பு – ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு

vishal actor

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.

நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதேபோல, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவி காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்தோம்.

நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. ஒரு சார்பாக நடந்து கொண்டது. தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தேர்தலை ரத்து செய்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை மறுதினம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.