Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹீரோ படத்தின் கதை திருடப்பட்டது தான் – பாக்யராஜ்

K. Bhagyaraj

இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் இயக்குநர் மித்ரன் தன் கதையை திருடி ‘ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. ‘ஹீரோ’ படம் கடந்த வாரம் வெளியான நிலையில், கதை திருட்டு நடந்தது உண்மைதான் என்று இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘இயக்குநர் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் டீசர் மற்றும் விளம்பரங்களைப் பார்த்தேன். அந்த படத்தின் கதை, நம் எழுத்தாளர் சங்கத்தில் நான் 26.04.2017 அன்று பதிவு செய்து வைத்துள்ள அதே கதைதான். எனவே, என் கதைக்கு உண்டான நியாயம் வழங்க வேண்டும்’ என்று கோரி 29.10.2019 தேதியில் ஒரு புகாரை நமது சங்கத்தில் கொடுத்தீர்கள்.

அதன்படி, நான் கதை சுருக்கத்தை மட்டும் தங்களிடம் கேட்டு வாங்கி கொண்டு, டைரக்டர் மித்ரனிடம் ‘ஹீரோ’ படத்தின் கதை சுருக்கத்தையும் எழுதி தர சொல்லி, அதை வாங்கி ஒப்பிட்டு பார்த்தோம். தங்கள் கதையும், டைரக்டர் மித்ரனின் ஹீரோ கதையும் ஒன்றுதான் என எல்லோரும் கருத்து வேறுபாடு இன்றி ஒரே முடிவாக கூறினார்கள். எனது கருத்தும் அதே என்பதால் மித்ரனை நான் எனது அலுவலகத்துக்கு வரவழைத்தேன்.

கதை, திரைக்கதைகளை ஒப்பிட்டு பார்ப்பதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழி காட்டுதலின்படி, இரண்டு கதைகளிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை இவ்வளவு ஒற்றுமைகள் இருப்பதாய் மொத்த உறுப்பினர்களும் கருதுகிறார்கள் என்ற விவரத்தை இயக்குநர் மித்ரனிடம் கூறினேன். ஆனால், அவர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பிட்டு பார்த்த 18 செயற்குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, அவர்களின் விளக்கத்தை கூற வேண்டும் என்று கேட்டார்.

அதன்படியே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இயக்குநர் மித்ரனின் கருத்தை யாரும் ஏற்க மறுத்து இரண்டு கதையும் ஒன்றுதான் என ஆணித்தரமாக கருத்து கூறினர். அதன்பின் அனைவரும் என்னிடம் ‘ஹீரோ’ படத்தில் போஸ்கோ பிரபுவான தங்களுக்கு கதைக் கான பெயரும், இழப்பீட்டு தொகையும் பெற்றுத்தர வலியுறுத்தினார்கள்.

ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் இயக்குநர் மித்ரன் பொறுப்பான பதில் அளிக்காமல் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்ததோடு, நீதிமன்றத்தின் மூலம் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா திருக்க உங்கள் மீது கேவியட் எடுத்து, எங்களுக்கு அதன் பிரதியை அனுப்பியிருந்தார்.

இதனை சங்கத்துக்கான பெரிய அவமதிப்பாக நினைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நமது சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிபடக் கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்து கூறுகிறோம்’. இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

‘ஹீரோ’ படத்தின் கதைத் திருட்டு விவகாரம் உறுதியானது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.