தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றும் சரத்குமார், தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீத்தா ரகுநாத் ஆகியோருடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். சரத்குமாருக்கு சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது கனவு. இதற்காக கடினமாக உழைத்தாலும், செலவுகளை மீறி சேமிக்க முடியாத வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி தவிக்கிறார்.இதையடுத்து தந்தையின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் சித்தார்த்தும், மீத்தா ரகுநாத்தும் களமிறங்குகிறார்கள். இருவரும் கடினமாக உழைத்து பணம் சேமிக்கிறார்கள். சிரமங்களுக்கிடையே சேமிக்கும் பணம் சந்தர்ப்ப சூழலால் செலவாகி போகிறது.இறுதியில் சரத்குமாரின் கனவு நிஜமானதா? சித்தார்த்தும், மீத்தாவும் தந்தை சரத்குமார் கனவை நிறைவேற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சராசரி குடும்ப தலைவனாக வாழ்ந்து காட்டியுள்ளார் சரத்குமார். இவரது அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மகனை திட்டவும் முடியாமல், அவனது வேதனையை தாங்கவும் முடியாமல் எதார்த்த நடிப்பை கொட்டி வியக்க வைக்கிறார். என்னை மாதிரி ஆகிடாதே… பியூச்சர் (Future) முக்கியம் என்று சொல்லும் போது நடுத்தர குடும்ப தலைவனாக பிரதிபலித்து இருக்கிறார். மனைவியாக நடித்து இருக்கும் தேவயானி, அமைதியான மனைவியாக நடித்து கவர்ந்து இருக்கிறார்.தோல்வி மட்டுமே வாழ்க்கையாக இருக்கும் சித்தார்த்தின் நடிப்பு கைதட்ட வைக்கிறது. பல இடங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தங்கையாக வரும் மீத்தா, குடும்பத்து உத்வேகம் கொடுக்கும் பக்குவமான பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வாழ்பவர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஶ்ரீ கணேஷ். பல காட்சிகளை யூகிக்க முடிந்தாலும், அழுத்தமான திரைக்கதை பலம் சேர்க்கிறது. பல இடங்களில் ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவர் சென்டிமென்ட் காட்சிகளை புகுத்தியது போல் அமைந்து இருக்கிறது.
தினேஷ் கிருஷ்ணன் – ஜித்தின் ஸ்தனிஸ்லாஸ் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம்
அம்ரித் ரகுநாத்தின் இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.”,
