Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“800” படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட முத்தையா முரளிதரன்

800-movie-press-meet update

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘கனிமொழி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ படத்தை இயக்கியுள்ளார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியதாவது, “இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் ஸ்ரீபதி என நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின் போது உதவி செய்த என் நாட்டு மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய வேண்டும் என இதை ஆரம்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறோம். வெங்கட்பிரபுவும் என் மனைவியும் சிறு வயது நண்பர்கள். அவர்கள் சந்தித்து பேசினார்கள். வெங்கட்பிரபு பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம் என்று சொன்னார். இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று என் மேனேஜர் ஆலோசனை சொன்னார்.

என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து தான் இயக்குனர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். வெங்கட்பிரபுதான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகிவிட்டார். ஸ்ரீபதியை நான் இயக்க சொன்னேன். பின்பு விஜய்சேதுபதி வந்தார். ஆனால், அதிலும் பிரச்சினை வந்தது. இந்த பிரச்சினைகள், கொரோனா இதை எல்லாம் தாண்டி படத்தை முடித்த இயக்குனர் ஸ்ரீபதிக்கும், படத்திற்கு ஒத்துழைத்த மொத்த குழுவுக்கும் நன்றி. நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது. படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கையில் எடுத்த 80 நாட்களும் படத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு அரசு ஒத்துழைப்புக் கொடுத்தது.

எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. ‘நீங்கள் காப்பி பண்ண வேண்டாம், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் நடியுங்கள்’ என்று ஹீரோ மதுரிடம் சொன்னேன். கிரிக்கெட் படமாக இல்லாமல் ‘800’ நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

800-movie-press-meet update
800-movie-press-meet update