தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை ஜெயித்தார். இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ்வும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்த 4-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் ஆரி வெற்றி பெற்றார். குறிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு, 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருந்ததாகவும், இரண்டாம் இடம் பிடித்த பாலாவுக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கமல் தெரிவித்தார்.
இதன்மூலம் சுமார் 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி வெற்றி பெற்றுள்ளார். பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை என கூறப்படுகிறது. வெற்றி பெற்ற ஆரிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.