தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகராக பல ரசிகர்களின் மனதை வென்ற இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசதி இருக்கிறார்.
பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டை மதுரையில் மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து வரவேற்றனர். அதன் பிறகு மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சூரியிடம் ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்காமல் இருந்த சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சூரி, “இந்த விஷயம் எனக்கு காலையில் தான் தெரியவந்தது. எல்லாரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் திரையரங்கமே வந்தது. திரையரங்கத்திற்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது. இந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பேசிய அவர் அதில், தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் நடித்தே எனக்கு பெருமை. இந்த படத்தில் யார் தேசிய விருது பெற்றாலும் அது நான் பெற்றதற்கு சமம் என்று கூறியிருக்கிறார்.