ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால், \”நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். நான் ‘லால் சலாம்’ படம் பார்த்தது தெரிந்ததும் ரஜினி சார் என்னை பேச அழைத்தார். அவரிடம் இந்த மாதிரி ஒரு படம் செய்ததற்கு நான் ஒரு ரசிகனாக பெருமைப்படுகிறேன். இந்த தைரியம் யாருக்கும் வராது என்றேன். ரஜினி சார் படம் என்றாலே விசில் அடிக்க வேண்டும், கைத்தட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அது எல்லாமே இந்த படத்தில் அளவாக இருக்கிறது. யாரும் அதை மிஸ் செய்யமாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு ரஜினி சாருக்கு தலை வணங்குகிறேன்\” என்றார்.