கன்னட திரைப்பட நடிகர் ஸ்ரீநாத் வசிஷ்டா. இவர் ஏராளமான கன்னட படங்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளின் தந்தையாக நடித்து பிரபலமானவர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர்கள் 2 பேரும் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது காவலாளிகள் யாரும் இல்லை. புதிதாக யாரும் வேலைக்கு வரவில்லை.
இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கமிட்டி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அங்கு வசித்து வருபவர்களின் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும் ஒருவர் முன்வந்து 8 மணி நேரம் என்ற அடிப்படையில் காவல் பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதன்படி நடிகர் ஸ்ரீநாத் வசிஷ்டா முழு உடல் பாதுகாப்பு கவச உடையை அணிந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காவல் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் தான் காவல் பணியில் ஈடுபடுவதை தன்னுடைய செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அது வைரலாகி வருகிறது. அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.