Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்

Actress Chitra's suicide was due to her husband's suspicion

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல, ஹேம்நாதின் 10 ஆண்டுகால நண்பர் என்று கூறி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவரும், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கைதானவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்ய முடியாது. இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் சையது ரோஹித்துக்கு அடிப்படை உரிமை இல்லை. அதனால் அவரது மனுவை ஏற்க முடியாது” என்று கூறி மனுவை நிராகரித்தார்.

சித்ராவின் தந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,‘சித்ராவின் கழுத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடம் எதுவும் பதியவில்லை. அவரது உடலில் 2 இடங்களில் ரத்தக்காயம் உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, “சித்ரா தூக்குப்போட்டு மூச்சு திணறலால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பட்டுப்புடவையில் தூக்குப்போட்டதால், கழுத்தில் தடம் எதுவும் பதியவில்லை. மேலும் சித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஹேம்நாத் திட்டியதால், அவர் தற்கொலை செய்ததாக நசரத்பேட்டை போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து, அதற்கு போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.