கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். நடிகைகள் 2 பேரும் சிறையில் இருந்தபடியே தங்களுக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 2 பேரின் ஜாமீன் மனுக்களும் 5 முறைக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதனால் நடிகைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவை காரணம் காட்டி, சஞ்சனாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் ஓட்டலில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் நடிகை சஞ்சனாவுக்கு முன்பே நடிகை ராகிணி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால், ராகிணி மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.
இந்த நிலையில் ராகிணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அதாவது மூச்சுத்திணறல், வயிற்று வலியால் ராகிணி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை.
இதையடுத்து சிறை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் நேற்று உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற ஜெயநகரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ராகிணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.