Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு 3-வது தடவையாக சம்மன் அனுப்பிய மும்பை போலீசார்

Actress Kangana Ranaut has been summoned by the Mumbai police for the 3rd time

வெவ்வேறு மதத்தினர் இடையை பகையை தூண்டும் வகையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்திரா போலீசார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த மாதம் 26, 27-ந் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு அவர்கள் தங்களது சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் குடும்ப திருமண வேலைகளில் இருப்பதால் தற்போதைக்கு ஆஜராக இயலாது என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் பதிலளித்தனர்.

இந்தநிலையில் கடந்த 9, 10-ந் தேதிகளில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நடிகை கங்கனாவுக்கு போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.