“தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்தது.இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் பொய்யானது என விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா, ‘நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர்.என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம். உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா உள்ளார்’ என்று தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேச்சு இவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.