“புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். முதல் -அமைச்சர் ரங்கசாமி நடிகை ஆண்ட்ரியாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இசை நிகழ்ச்சியில் \”ஊம்… சொல்றியா…ஊகூம் சொல்றியா.. மற்றும் நடிகர் விஜய்யின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.இசை நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர்.
இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் ஆண்ட்ரியா சிக்கி திணறினார். உடனே போலீசார் அவரை சிரமத்திற்கிடைய பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காரை துரத்தி சென்றனர். ஆண்ட்ரியா கார் பறந்து சென்றது. விழா முடிந்து இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது. ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியடித்து சென்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அப்போது மக்கள் ரெயில்வே கேட்டை கடக்கும் போது சென்னை ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங்கில் கேட் இறக்கப்பட்டது. இதில் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கினார்கள். இதனால் மீண்டும் கேட் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.