Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடும் கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படப்பிடிப்பு

annaatthe shooting with strict restrictions

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.

மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ”டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்” என்று முடிவெடுத்தார் ரஜினி.

இதற்கிடையில் டிசம்பர் 31-ம் தேதி கட்சியைத் தொடங்கவிருக்கும் அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். அப்போது பேசும்போது, கட்சி வேலைகள் தீவிரமாகும் முன் முதல் கட்டமாக ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிடுவதாகவும் கூறியிருந்தார்.

அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது, அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது. ” ‘அண்ணாத்த’ படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பையும் முழுக்க முழுக்க ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஐதராபாத் செல்ல ரஜினி சாருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் கொண்டுவர உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடரில் அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் ‘அண்ணாத்த’ டீமிற்கும் செய்யப்படவுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.

மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். தீவிர பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து 40 நாள்கள் ரஜினி சாரின் ஷூட்டிங் இருக்கும். அதன் பின், அவர் சென்னை திரும்பிவிடுவார். படத்தை 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.