ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா.
மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்கு திரும்புகிறார்.
இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவிறுப்படைகிறது. அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் இவர்கள், இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நாயகியாக வரும் ராஷி கன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அழகால் கவரும் ஆண்ட்ரியா, பின்னர் பேயாக வந்து மிரட்டவும் செய்கிறார்.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி ஆகியோரின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜமீன்தார் சம்பத், மந்திரவாதி வேலராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. முந்தைய பாகங்களை விட இப்படத்தை பிரம்மாண்டமாக கொடுத்து இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடித்தும் அசத்தி இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். பல இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக உருவாக்கி அதகளப்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி.
சத்யா இசையில் பாடல்கள் சிறப்பாகவும் பின்னணி இசை மிரட்டலாகவும் அமைந்திருக்கிறது. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை.