கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இயக்க உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கவுதம் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், அசுரன் படத்தில் தனுசுக்கு மகனாக நடித்து பிரபலமான டீஜே அருணாச்சலம், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தனக்கு பிடித்த 90ஸ் ஹீரோக்களில் சிம்புவும் ஒருவர் என தெரிவித்துள்ள டீஜே, அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தற்போது அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது டீஜே லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.