அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்கள் சிலர் சந்திக்கும் பிரச்சினை குறித்த கதை.
அஸ்வின்ஸ் நாயகன் வசந்த்ரவி மற்றும் அவரின் நண்பர்கள் அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்காக உலகின் மிகவும் ஆபத்தான பகுதி எனச் சொல்லப்படுகிற லண்டன் தீவில் இருக்கும் ஒரு பாழடைந்த மேன்ஷனுக்கு செல்கிறார்கள். அங்கு நண்பர்கள் அனைவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். வசந்த்ரவி மட்டும் உயிருடன் இருக்கிறார்.
இறுதியில் நண்பர்களை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? வசந்த் ரவி மட்டும் உயிருடன் இருக்க காரணம் என்ன? பாழடைந்த பங்களாவில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி திறமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் அசத்தி இருக்கிறார் நாயகி விமலா ராமன். மற்ற கதாபாத்திரங்கள் சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தருண் தேஜா. ஆனால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்து இருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை தெளிவு இல்லாமல் பார்ப்பவர்களை குழப்பி இருக்கிறார் இயக்குனர். ஹாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் இருந்தாலும் கதையும், திரைக்கதையும் பார்ப்பவர்களுக்கு புரியாமல் கடந்து செல்கிறது.
விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், எட்வின் சாகேவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். இருவரும் பல இடங்களில் வாவ் என்று சொல்ல வைத்து இருக்கிறார்கள்.
மொத்தத்தில் அஸ்வின்ஸ் – ஆர்வம் இல்லை.