2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின் விஜய் நடித்த ‘தெறி’, ’மெர்சல்’ மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபலமடைந்தார். அட்லி தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’கிங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இவர் இயக்கிய பிகில் திரைப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ராயப்பன் என்ற கதாப்பாத்திரம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் அட்லியின் சமீபத்திய பதிவு ஒன்று ஒட்டுமொத்த ரசிகரையும் திசை திருப்பியுள்ளது. அமேசான் ஓடிடி தளத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில், பிகில் ராயப்பன் புகைப்படத்தை பகிர்ந்து, ராயப்பன் கதையை மட்டும் வைத்து ஒரு முழு படம் உருவானால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் என்று பகிரப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் அட்லி, “செஞ்சிட்டா போச்சு” என்று பதிவிட்டுள்ளார்.
அட்லியின் இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் விஜய்யும், அட்லியும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவரின் இந்த பதிவு, இருவரும் இணைந்து பணிபுரிய இருப்பதை உறுதி படுத்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Senjittaaaaa pochuuuuu….. https://t.co/sfIxMt3RZb
— atlee (@Atlee_dir) May 24, 2022