Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

பபூன் திரை விமர்சனம்

baffoon movie review

காரைக்குடியில் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருக்கும் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா இருவரும் நாடக தொழில் நலிவடையும் காரணத்தால் வெளிநாடு செல்ல நினைக்கின்றனர். ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா இருவரும் தற்காலிகமாக தனபால் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்கின்றனர். அப்போது ராமநாதபுரத்திலிருந்து உப்பை ஏற்றிக் கொண்டு இருவரும் வருகையில் லாரியில் உப்பிற்கு பதிலாக போதை பொருள் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்து இருவரையும் கைது செய்கின்றனர்.

இறுதியில் இருவரும் நிரபராதி என்று நிரூபித்தார்களா? அந்த போதைப் பொருள் லாரியில் எப்படி வந்தது? காவல்துறையினர் கடத்தல் மன்னனை கண்டுபிடித்தார்களா? என்பது தான் மீதிக்கதை. காரைக்குடி வாழ் இளைஞனாக வைபவ் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகளில் பயத்தையும் பதற்றத்தையும் பிசிறில்லாமல் வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். ஆத்தங்குடி இளையராஜா தனக்கான கதாபாத்திரத்தை தெளிவாக ஏற்று நடித்து முதல் படத்திலேயே தனக்கான இடத்தை பிடித்துள்ளார். கதாநாயகி அனகா சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். கேமியோ ரோலில் வரும் ஜோஜு ஜார்ஜ் தனது நடிப்பால் அதகளம் செய்துள்ளார். அவருக்கான காட்சிகளில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

முதல் திரைப்படம் என்றாலும் தான் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறியிருக்கிறார் இயக்குனர் அசோக் வீரப்பன். நலிவடைந்து வரும் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை அதைச் சார்ந்த சிக்கல்களை அழுத்தமாக கூறியிருப்பது பாராட்டிற்குரியது. இலங்கை அகதிகள், புலம் பெயர் தமிழர்கள் என சமுதாய பிரச்சினைகள் பற்றி பேச முயற்சித்ததன் மூலம் ரசிகர்களை திரையில் இருந்து விலகவிடாமல் வைத்துள்ளார் இயக்குனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி இடங்களின் கடலழகு கண்களுக்கு விருந்தளிக்கிறது. அந்த மக்களின் எதார்த்தமான வாழ்வியலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும் பாடல்களுக்கும் படத்திற்கும் அதிக பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் ‘பபூன்’ – அழகு

baffoon movie review
baffoon movie review