கொரோனா பரவல் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கில் பல மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து உள்ளன. இதனால் திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வந்துள்ளன. மலையாளத்தில் பகத் பாசில் நடித்துள்ள சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளன.
தியேட்டர்களை திறந்த பிறகும் பகத் பாசில் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அவரது படங்களை இனிமேல் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பகத் பாசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் தடை குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.