மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும் நடித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார். அவருக்கு பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். பேஹ்ராவுடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியான வங்காளத்தின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுபற்றி மஞ்சுஷாவின் தாயார் கூறும்போது, பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறினார். பிதிஷாவை பற்றியே எப்போதும் பேசி கொண்டே இருந்துள்ளார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் ஊடகக்காரர்கள் வருவார்கள் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன்.
ஆனால், அதேபோன்று நடந்துள்ளது என கூறியுள்ளார். கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்க கட்ட விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது என்று போலீசார் கூறினர். இந்நிலையில், கொல்கத்தாவில் 12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழந்து உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.