Tamilstar
Movie Reviews

பிஸ்கோத் திரை விமர்சனம்

Biskoth Movie Review

கடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும் கடந்த மே மாதம் வெளியாக வேண்டிய பிஸ்கோத் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. பிஸ்கோத் தீபாவளிக்கு விருந்து தானா? இனிக்கிறதா? என்ன சுவை என ருசித்துப் பார்ப்போமா…

படத்தின் கதாநாயகனாக சந்தானம் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார். குடிசை தொழிலாக அவரின் தந்தை ஆடுகளம் நரேன் பிஸ்கோத் தயாரித்து விற்பனை செய்கிறார். தொழிலில் அவருக்கு உதவியாக அவரின் நண்பன் ஆனந்த்ராஜ். கூடவே பயணிக்கிறார்.

தன் மகனை உயர்வான இடத்தில் வைக்க வேண்டும் என வழக்கமான தந்தையாக நரேனுக்கு ஒரு ஆசை. இந்நிலையில் சந்தானம் குழந்தையாக இருக்கும் போது அவரின் தந்தை திடீரென இறந்துவிடுகிறார். பின் சந்தானம் என்ன ஆனார்? பிஸ்கோத் தயாரிக்கும் தொழில் என்ன ஆனது? அப்பா நரேனின் ஆசை நிறைவேறியதா என்பது இந்த பிஸ்கோத் தயாரிப்பு.

சந்தானம் படம் என்றால் எல்லோருக்கும் முகத்தில் ஒரு சின்ன ஸ்மைல் இருக்கும் தானே. அந்த ஸ்மைலோடு தியேட்டருக்குள் வந்தவர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் மனதை நிறைத்து வெளியே அனுப்புகிறார். சிரிப்புக்கு கியாரண்டி என உத்தரவாதம் கொடுக்கலாம்.

ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக இல்லாமல் இயல்பான கேரக்டரில் சந்தானத்தை இப்படத்தில் பார்க்க முடிந்ததை ரசிகர்களின் முகபாவனை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. ஹீரோவை மூன்று ரோலில் மூன்று விதமாக பார்க்கலாம். மூன்றும் மூன்று விதமான ஸ்டைல் தான். ஆனால் காமெடியில் மூவருக்கும் கவுண்டர் விசயத்தில் ஒரே ஒற்றுமை தான். ஆனால் அலட்டல் இல்லை.

ஹீரோயின் தாரா அலிஷா பெர்ரி. இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என ரொம்ப நேரம் யோசிக்க வேண்டாம்? Al படத்தில் சந்தானத்துடன் நடித்த முகம் தான் இந்த தாரா. இவருக்கும் இயல்பான ஒரு எண்ட்ரி காட்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். போதுமானது தான்.

கண்ணன் ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக இறங்கி, கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, பூமராங், இவன் தந்திரன் என சில படங்களை இயக்கிய முகம் தான். ரொமாண்டிக் காமெடி கதையை இந்த பிஸ்கோத் படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார்.

அநேகமாக இன்று தான் அவர் நிம்மதி பெரு மூச்சு விட்டிருப்பார் என்றே நினைக்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள் சார்.. பிஸ்கோத்தில் பெரிதளவில் ரொமான்ஸை எதிர்பார்த்துவிடமுடியாது எனலாம். முதல் பாதி உடனே முடிந்துவிட்டது போல இருந்தால் இரண்டாம் பாதியே தான் படத்தின் தொடக்கம் போல தெரியலாம் சிலருக்கு.

ஆனந்த் ராஜ் இதே போல மெயிண்டெயின் செய்தால் அவருக்கு கெத்தாக இருக்கும் போலயே. வில்லனாகவே நாம் அவரை சிறுவயதில் பார்த்து பழக்கிட்டோமல்லவா.

காமெடிக்கு சந்தானத்துடன் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர். மூவரின் கூட்டணியும் சிரிப்பிலேயே நம்மை திக்கு முக்காடவைக்கிறது. இதற்காகவே இயக்குனருக்கும் நன்றி சொல்லனுமே.

பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இப்படம் 400 வது வது படம். கலை நயம் குறையாத அதே முகபாவம். அவர் கதை சொல்லும் போது இன்னும் கொஞ்சம் அழகு.

நடன மாஸ்டர் சிவசங்கர் மற்றும் அவரின் கூட்டாளிகளும் இப்படத்தில் கலக்குகிறார்கள்.

ஆதித்யா வர்மா படத்தின் இசையமைப்பாளர் ராதனின் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்டதும் நினைவில் நிற்கிறது.

விடாமல் சிரிக்க வைக்கும் சந்தானத்தின் காமெடி கவுண்டர்.

காமெடி நடிகர்களின் கலக்கலான கூட்டணி ரசிகர்களுக்கு திருப்தி.மற்றவர்கள் பேசும் சில வசனங்கள் வாழ்க்கையின் எதார்த்தம் பேசும்.

கதையில் ஆழமான விசயம் இல்லையோ என்ற ஃபீல்.

மொத்தத்தில் பிஸ்கோத் டேஸ்ட் ஓகே. தீபாவளிக்கு ஒரு சிரிப்பு வெடி.