அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் படம்.
நாயகன் ஜெயம் ரவி சென்னையில் தந்தை, தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சின்ன வயதில் இருந்தே ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்டே வளர்கிறார். இதனால் பல பிரச்சனைகள் வருகிறது. மேலும் வக்கீல் படிப்பும் பாதியிலேயே நின்று விடுகிறது. குடியிருக்கும் பகுதியிலும் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால், ஜெயம் ரவியை ஊட்டியில் இருக்கும் தனது அக்கா பூமிகா வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். பூமிகாவும் ஜெயம் ரவிக்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வதாக பெற்றோர்களுக்கு சத்யம் செய்கிறார். ஆனால் நாளடைவில் ஜெயம் ரவியால் அக்கா பூமிகாவின் குடும்பம் பிரிகிறது.இறுதியில் அக்கா பூமிகாவை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். பவுன்சர், பி.டி. மாஸ்டர் என கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். காதல், அக்கா பாசம், சென்டிமென்ட் செய்து கவர்ந்து இருக்கிறார். ஆனால், காமெடி பெரியதாக எடுபடவில்லை.நாயகியாக நடித்து இருக்கும் பிரியங்கா மோகன், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அக்காவாக நடித்து இருக்கும் பூமிகா, கதாபாத்திரத்தை உணரவில்லையோ என்று தோன்றுகிறது. நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன் இங்கிலீஷ் பேசி சிரிக்க வைத்து இருக்கிறார். ராவ் ரமேஷின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். தம்பி பாசத்தில் தொடங்கி மருமகன் மாமனார் ஈகோ கிளாஷ் படமாக மாற்றி இருக்கிறார். காமெடி காட்சிகள் மற்றும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது வருத்தம். சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் ரசித்து இருக்கலாம்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக மக்காமிசி பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை சில இடங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் பழைய படங்களின் சாயல் தெரிகிறது.
விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக அமைந்துள்ளது.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,