வெற்றி மதுக்கடையில் பணிபுரிபவர். அங்கு வழக்கமாக மது வாங்க வரும் மும்தாஜ் சார்கர் மீது வெற்றிக்கு தீவிர காதல். மும்தாஜின் பின்னணி தெரிய வரும்போது அவர் அதிர்ச்சி ஆகிறார். ஆனாலும் தனது காதலை அதிகப்படுத்தி அவரை மகிழ்ச்சியான பெண்ணாக வைத்துக்கொள்கிறார். இருவரும் திருமணத்துக்கு தயாராகும்போது ஒரு அதிர்ச்சி நடக்கிறது.
கார்த்திக் ரத்தினம் ஒரு தாதாவிடம் அடியாளாக இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் அயிராவும் அவரும் முதலில் மோதிக்கொள்கிறார்கள். அந்த மோதலே காதலாகிறது. இந்த காதலுக்கு மதம் குறுக்கே நிற்கிறது.
பள்ளியில் படிக்கும் நிஷேஷுக்கு சக மாணவி ஸ்வேதா மீது காதல். ஸ்வேதாவின் பாட்டு போட்டி ஆசையை நிறைவேற்ற நிஷேஷ் பாடுபடுகிறான். ஆனால் அது நிறைவேறும்போது இருவரும் பிரிய நேரிடுகிறது.
தீபன் ஒரு அரசு அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார். 49 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் அவருடன் நட்பு பாராட்டுகிறார் அவருக்கு அதிகாரியாக வரும் சோனியா கிரி. ஒரு கட்டத்தில் சோனியாவுக்கு தீபன் மீது காதல் வர அவரும் சம்மதிக்க இந்த வயதான ஜோடியின் காதலை சமூகம் ஏற்றுக்கொண்டதா? என்பது படத்தின் முடிவு.
தாடியாக வரும் வெற்றி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். சின்ன உடலசைவுகள் மற்றும் வசனங்கள் மூலம் நம்பகத்தன்மை கொடுக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் மும்தாஜ் சார்கரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார்.
முதல் மரியாதை படத்துக்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி மீண்டும் வந்துள்ள தீபனை இனி சினிமாவில் அடிக்கடி பார்க்கலாம். தீபன் – சோனியா ஜோடி நடுத்தர வயது நேசத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. கார்த்திக் ரத்தினம் – அயிரா ஜோடியின் காதலில் இளமை துள்ளல்.
4 வெவ்வேறு வயதினருடைய கதை. 4 கதைகளையும் இணைக்கும் புள்ளி காதல் மட்டுமே. 4 காதல்களில் வெற்றியில் முடிந்த காதல் எது? தோல்வியில் முடிந்த காதல்கள் எவை? அவற்றுக்கான காரணம் என்ன? என சுவாரசியமான கேள்விகளை எழுப்பி கடைசியில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது படம்.
தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற கேர் ஆப் கச்சரபள்ளம் என்ற படத்தை தமிழ்நாட்டு மண்ணுக்கு தகுந்தாற்போல் மாற்றி கொடுத்துள்ளார் ஹேமன்பர் ஜஸ்தி.
சுவீகர் அகஸ்தியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு இனிமை கூட்டுகிறது. கே.குணசேகரின் ஒளிப்பதிவும் அழகு. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு படத்திற்கு தன் தேவையை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.
நடிகர்களின் வசன உச்சரிப்பு, உடல் மொழியில் தெரியும் வித்தியாசம் மட்டுமே சின்ன பலவீனம். வெற்றியை போல பிற கதாபாத்திரங்களும் தெரிந்த முகங்களாக இருந்து இருக்கலாம்.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் 4 காதல்களுமே அழகான கவிதைகளாக அமைந்துள்ளது. 4 கதைகளையும் இணைக்கும் கிளைமாக்சும் நெகிழ வைக்கிறது.
மொத்தத்தில் ‘கேர் ஆப் காதல்’ ரசிக்கலாம்.