தமிழில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவரது மகளுக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகனுமான ரோகித் தாமோதரன் என்பவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோகித் உட்பட 7 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் கிரிக்கெட் பயிற்சியின் போது, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்து இருக்கிறார். அப்போது சங்க நிர்வாகிகள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறி அனுப்பி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து சிறுமி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் உள்பட 7 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.