கிராமத்து அரசியல் வாதியான ராஜசேகர் ஊரில் நடக்கும் தேர்தல்களில் வெற்றிப் பெற்று செல்வாக்குடன் இருக்கிறார். இங்கு உள்ள மக்கள் மது தான் எல்லாமே என்ற நிலையில் உள்ளனர். இதனால் மதுக்கடை முதலாளியான சாய்குமார் மீது மக்கள் அனைவருக்கும் பெரிய மரியாதை உள்ளது.
இது ராஜசேகருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் அரசு மது ஒழிப்பு சட்டத்தின் கீழ் சாய் குமாரின் மதுக்கடையை மூடிவிடுகிறது. அப்போது ராஜசேகர் தன் செல்வாக்கை பயன்படுத்தி மதுக்கடையினை திறந்து அதற்கு முதலாளி ஆகிவிடுகிறார். இதன் மூலம் தன் நீண்ட நாள் ஏக்கமான மக்களின் மரியாதையும் பெற்று விடுகிறார்.
இந்த நேரத்தில் அரசியல்வாதியான ராஜசேகர் இறந்து விடவே சமுத்திரகனி மற்றும் அவரது மகன் ஷைன் டாம் சாக்கோ இந்த மதுக்கடையின் உரிமையை பெற்று மக்கள் செல்வாக்குடன் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கிராமத்து மக்களில் ஒருவரான நானி சிறு வயதிலிருந்து கீர்த்தி சுரேஷை காதலித்து வருகிறார். இவரின் நண்பர் தீக்ஷித் ஷெட்டியும் கீர்த்தி சுரேஷை காதலிக்கவே நண்பனுக்கான தன் காதலை விட்டுக் கொடுத்து விட்டு மனதில் அந்த காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நானி.
இந்தநிலையில் கீர்த்தி சுரேஷிற்கு அவரது குடும்பத்தார் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அப்போது ஊரில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று மதுக்கடைக்கு கணக்காளர் ஆனால் உங்கள் பொண்ணை என் நண்பனுக்கு தருவீர்களா என்று நானி கேட்க கீர்த்தி சுரேஷ் குடும்பத்தாரும் ஒப்புக் கொள்கின்றனர். நானி போட்டியில் வெற்றி பெற்றுவிடுகிறார்.
ஒரு கட்டத்தில் நானி மற்றும் கிராம மக்களை போலீஸ் கைது செய்கின்றனர். அப்போது சாய்குமார் இவர்களை காப்பாற்றவே நானி அவர் தேர்தலில் வெற்றி பெற உதவுகிறார். இறுதியில், சாய்குமார் தேர்தலில் வெற்றி பெற்று மதுக்கடையை திரும்ப பெற்றாரா..? தீக்ஷித் ஷெட்டிக்கும் கீர்த்தி சுரேஷிற்கும் திருமணம் நடந்ததா..? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனான நானி எப்போதும் போல் தன் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். காதல், வருத்தம் அழுகை என ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். சமுத்திரகனி, ஷைன் டாம் சாக்கோ, தீக்ஷித் ஷெட்டி ஆகியோ சிறப்பான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் திரைக்கதையை வடிவமைத்துள்ளார். இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் கிளைமேக்ஸ் காட்சியை அருமையாக அமைத்து பாராட்டை பெறுகிறார்.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மொத்தத்தில் தசரா – கொண்டாட்டம்