பாட்டி அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி தன்யாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, டாக்டராக இருக்கும் விவேக், குழந்தை வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடி அலைகிறார். அப்போது ஹரீஷ் கல்யாணை சந்திக்கும் விவேக், அவரிடம் சம்மதிக்க வைத்து டோனராக்குகிறார்.
இந்நிலையில், தன்யாவிற்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் திருமணம் நடக்கிறது. தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள்.
இறுதியில் பிரச்சனை முடிந்து இருவரும் ஒன்றுசேர்ந்தார்களா? அது என்ன பிரச்சனை? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரீஷ் கல்யாண், தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி தன்யா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் நடிகர் விவேக். இவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை மிகவும் எளிதாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். காமெடியும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
விந்தணு முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் சொல்லும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. ரீமேக் படம் என்றாலும் அதை சிறப்பாக எடுக்க திறமை வேண்டும். அதை அனைவரும் பாராட்டும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசம் இல்லாமல் திரைக்கதை உருவாக்கி இருக்கிறார்.
இப்படத்திற்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை.