காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது.
உணவு இடைவெளிகளிலேயே இரவு உணவு மற்றும் காலை உணவிற்கு இடைப்பட்ட நேரம் தான் அதிகம். காலை உணவைத் தவிர்த்தால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். அதேப் போல் காலை உணவை சரியானதாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
மேலும் காலை உணவை ஒருவர் தவிர்த்தால், டைப்-2 சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகரிக்கும்.
சர்க்கரை நோய் இருந்தால், எப்போதும் சுவையில்லாத உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வேளையும் வாய்க்கு ருசியாகவே சாப்பிடலாம். அதிலும் காலை உணவின் போது, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத அளவிலான சுவையான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் நிறைந்த காலை உணவுகள், இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.
இக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சிறப்பான மற்றும் சுவையான சில காலை உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, காலை வேளையில் அவற்றை உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
விரைவில் காலை உணவைத் தயாரிக்க வேண்டுமா?
அப்படியானால் அதற்கு ஸ்மூத்தி ஏற்றதாக இருக்கும். அதுவும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள பொருட்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரிக்க வேண்டும்.
ஸ்மூத்தி தயாரிப்பதற்கு முக்கிய பொருளாக கொழுப்பு இல்லாத பால், கொழுப்பு இல்லாத தயிர், பாதாம் பால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்ததாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான பழங்கள் மற்றும் காய்கறிகளான ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், ப்ளூபெர்ரி, அவகேடோ, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்மூத்தியின் மேலே நார்ச்சத்து அதிகம் நிறைந்த நட்ஸ், ஆளி விதை அல்லது சியா விதைகளைத் டாப்பிங்காக பயன்படுத்தலாம்.
படித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க, அவர்களும் பயன் பெறட்டும்.