சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த நான்கு மாதமாக இரண்டாம் தளத்தை வாடகைக்கு எடுத்து, அதில் அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து அங்கேயே தங்கி வருகிறார். இரண்டாம் தளத்தில் கீழே தொழிலதிபர் ரங்க பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நடிகர் விஷ்ணு விஷால் மது குடித்து விட்டு தங்களிடம் பிரச்னையில் ஈடுபட்டதாக தொழிலதிபர் ரங்கபாபு 100-க்கு கால் செய்துள்ளார். மேலும் காவல் கூடுதல் ஆணையரிடம் ஆன்லைனிலும் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் கூறும்போது, தான் அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு டயட்டில் இருந்து வருகிறேன்.
டயட்டில் இருக்கும் ஒரு நபர் எப்படி மது அருந்துவார்? தன்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய தொழிலதிபர் குடும்பத்தினர் இதுபோன்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள் என்று கூறினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.