ஸ்ரீகாந்த்- சிந்தியா லெளர் டே ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் “தினசரி”. மேலும் இதில் எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடிக்கின்றனர்.
இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கும் இதற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஜான் பிரிட்டோ கலையையும், சாம் சண்டை பயிற்சியையும், தினேஷ் நடன பயிற்சியையும் , பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல் படமாக இயக்கி வரும் சங்கர் பாரதி படத்தை பற்றி கூறியதாவது, “மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். பிரேம்ஜி, எம்.எஸ். பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.
இளையராஜா இசையில் முதல் பட இயக்குனர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம்- இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என்படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்.” என்று கூறினார்.
500 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளவரும், ஆறு நேரடி தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான என். விஜயமுரளி தமது மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ” தினசரி ” திரைப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள “தினசரி” படத்தில் இரண்டு பாடல்களுக்கு மாபெரும் அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது “தினசரி” திரைப்படம்.