Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் வீட்டில் திருடிய பதக்கங்களை மன்னிப்பு கடிதத்துடன் வைத்து சென்ற கொள்ளையர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரை சேர்ந்தவர் சினிமா டைரக்டர் மணிகண்டன்.

இவர் ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய தேசிய விருது பெற்ற படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர்.

மத்திய அரசால் வழங்கப்பட்ட 2 தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை உசிலம்பட்டி எழில்நகரில் உள்ள வீட்டில் மணிகண்டன் வைத்திருந்தார். தற்போது மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். உசிலம்பட்டியில் உள்ள வீடு பூட்டப்பட்டு இருந்தது.

கடந்த 8-ந் தேதி அவருடைய வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே ஒரு கும்பல் புகுந்தது. பீரோவை உடைத்து, அதில் இருந்த தேசிய விருது பதக்கங்கள், பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கொள்ளையர்கள் பிடிபடவில்லை.

இந்த நிலையில், நேற்று டைரக்டர் மணிகண்டனின் வீட்டு வாசல் கேட் பகுதியில் ஒரு பாலித்தீன் பை தொங்கிக்கொண்டிருந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாக விரைந்து வந்து அந்த பையை திறந்து பார்த்தனர்.

கொள்ளையர்கள் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம்.
கொள்ளையர்கள் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம்.

அதில், ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் அந்த கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் அந்த பையில் போட்டு தொங்க விட்டு விட்டு திருடர்கள் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை போலீசார் மீட்டு, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தேசிய விருதின் முக்கியத்துவத்தை உணர்ந்த கொள்ளையர்கள், அதை திருடிய வீட்டிலேயே கொண்டு வந்து பையில் கட்டி தொங்க விட்டுச் சென்றது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Director Manikandan latest update viral
Director Manikandan latest update viral