தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு பிரபல இயக்குனர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் உச்சத்தில் உள்ள சில நடிகர்களின் சின்ன அசைவுக்குகூட இங்கே பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களின் ஒரு சொல்லுக்கு பல பொருள் சொல்லப்படுகிறது. அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றைக்கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ அல்லது அறிக்கையோ வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய்ச்சேரும். பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும். எத்தனை கோடி நிதி கொடுத்தாலும், அதைவிட இது பயனுள்ளதாக அமையும்” என பேரரசு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பேரரசு தமிழில், திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.