கடந்த சில நாட்களாக திரையுலகினர் மத்தியில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார்.
ஆனால் இயக்குனர் தங்கர்பச்சான் புதிய ஒளிப்பதிவு சட்டத்தை ஆதரித்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர்.
இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ள தங்கர்பச்சான், தன் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே தான் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டத்தை ஆதரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.