இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்ற சுவேதா பாசு, தமிழில் உதயாவின் ரா ரா படத்தில் கதாநாயகியாக வந்தார். கருணாஸ் ஜோடியாக சந்தமாமா மற்றும் ஒரு முத்தம் ஒரு ரத்தம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சுவேதா பாசுவும் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து, 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். கொரோனா ஊரடங்கில் சுவேதா பாசுக்கு மன அழுத்த பிரச்சினை இருந்தது, அதற்கு சிகிச்சை பெற்றார். விவாகரத்துக்கு பிறகு தனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக சுவேதா பாசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ரோகித்தை விவாகரத்து செய்து விலகியதை சாதாரண பிரிவாகவே உணர்கிறேன். சிலர் பத்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்து செல்வதை பார்த்து இருக்கிறேன். ஆனால் எனது திருமண வாழ்க்கை 8 மாதங்களிலேயே முடிந்துவிட்டது.
விவாகரத்து மற்றவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் நான் அதை மோசமாக உணரவில்லை. எனக்கு நானே தோழியாக இருந்து தேற்றினேன். விவாகரத்து எனது வாழ்க்கையில் மாற்றத்தை தந்துள்ளது. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.